கர்நாடகாவில் ‘ஹாஃப் ஹெல்மெட்’ அணிய தடை! மீறினால் அபராதம் - புதிய உத்தரவு
கர்நாடகாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் பயன்படுத்தும் பாதியளவு ஹெல்மெட்டுகளுக்கு போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதற்கு பதிலாக பி.ஐ.எஸ். அல்லது ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கொண்ட தரமான ஹெல்மெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் சிலர் போலீஸ் சோதனை மற்றும் அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காக ‘ஹாஃப் ஹெல்மெட்’ எனப்படும் குறைவான பாதுகாப்பு கொண்ட ஹெல்மெட்டுகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த வகை ஹெல்மெட்டுகள் தலையின் மேற்பகுதியை மட்டும் மூடி, முகம், தாடை மற்றும் காதுகள் உள்ளிட்ட பகுதிகளை முழுமையாக பாதுகாப்பதில்லை.
இதுதொடர்பாக கடந்த வாரம் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் மற்றும் போலீஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அப்போது ஹாஃப் ஹெல்மெட்டுகளின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் ஹாஃப் ஹெல்மெட்டுகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி இதுபோன்ற ஹெல்மெட்டுகளை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹாஃப் ஹெல்மெட்டுகளை தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, கர்நாடக அரசு போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதசாரிகளுக்கான நடைபாதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுதல், ஒருவழிப் பாதையில் எதிர்திசையில் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு புள்ளிகள் அடிப்படையிலான ஓட்டுநர் உரிம முறை கொண்டு வருவது குறித்தும் கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கு அபராதப் புள்ளிகள் சேர்ந்தால் ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தும் வகையில் இந்த முறை அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, கர்நாடகாவில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் இனிமேல் ஹாஃப் ஹெல்மெட்டுக்கு பதிலாக உரிய தரச்சான்று கொண்ட பாதுகாப்பான ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவது அவசியமாகிறது.
