“குழந்தை இல்லை... வரதட்சணையும் தரல” மனைவியை கொன்ற வக்கீல்! கர்நாடகாவில் அதிர்ச்சி
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் குழந்தை இல்லாததை காரணம் காட்டியும், கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும் மனைவியை வக்கீல் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிஞ்சோலி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சூர்யகாந்த் (34). வக்கீலான இவருக்கும் பிரியங்கா (30) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு குழந்தை இல்லை.
குழந்தை இல்லாதது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரியங்காவின் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு சூர்யகாந்த் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று குழந்தை இல்லாததை காரணம் காட்டியும், கூடுதல் வரதட்சணை கேட்டும் பிரியங்காவை சூர்யகாந்த் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சூர்யகாந்த் தனது மனைவி பிரியங்காவின் கழுத்தை நெரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.பின்னர் பிரியங்காவின் மரணத்தை தற்கொலை போல காட்ட சூர்யகாந்த் முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சிஞ்சோலி போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கலபுரகி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் சூர்யகாந்தை கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தை இல்லாததை காரணமாகக் கூறி மனைவியை கொலை செய்ததாக வக்கீல் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
