கோழிகளை போல் இரும்புக் கூண்டில் 5 குழந்தைகள்! ஒரே பைக்கில் 6 சிறுவர்களை ஏற்றிச் சென்ற நபர்... அதிர்ச்சி வீடியோ

 
கர்நாடகா

கர்நாடக மாநிலம் மைசூருவில் பைக்கின் பின்புறம் பொருத்தப்பட்ட இரும்புக் கூண்டுக்குள் 5 குழந்தைகளை அமர வைத்து அழைத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு-நஞ்சன்கூடு சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது TVS XL இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் பெரிய இரும்புக் கூடை ஒன்றை பொருத்தியிருந்தார். அதற்குள் 5 சிறு குழந்தைகள் பாதுகாப்பின்றி அமர வைக்கப்பட்டிருந்தனர். மேலும், ஒரு குழந்தை வாகனத்தின் முன்பகுதியிலும் அமர்ந்திருந்தது. இதனால் ஒரே இருசக்கர வாகனத்தில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 7 பேர் பயணம் செய்ததாக வீடியோவில் தெரிகிறது.

வாகனத்தை ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், குழந்தைகள் யாரும் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைக்கின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் இந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு அழைத்துச் சென்றது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணையும் குறிப்பிட்டு, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Karnataka man rides with 5 children packed into metal basket one seated in front - India Today

இதற்கிடையே, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தார்களா என்பது குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில், குழந்தைகளை இவ்வாறு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.