கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று மாலை பதவியேற்பு!
கர்நாடக மாநிலத்தின் 25 வது முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி சித்தராமையா பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டத்தில் புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆட்சி அமைக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா இன்று மாலை 4.05 மணிக்கு ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் டி.கே.சிவக்குமாருடன் சேர்த்து 14 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் விழா நடக்கும் இடத்தில் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். புதிய அமைச்சரவையில் இளைஞர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் தகுந்த இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
