கார்த்திகை தீபம்... திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் நவம்பர் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
பிரம்மனும் திருமாலும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாகச் சிவபெருமான் எழுந்தருளியதைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தன்று திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்வாக, வரும் நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபத் திருவிழாவைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என்பதால், மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் நவம்பர் 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் டிசம்பர் 5-ஆம் தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் பணி நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அவசர அலுவல்களுக்காகச் செயல்படும் என்றும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
