மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்... நவ.24-ல் லட்சம் தீபங்கள் ஏற்றும் வைபவம்!
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோயிலில் கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை திருவிழா இன்று காலை 9.45 மணியளவில் சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்குச் சிறப்புப் பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி மீனாட்சியும் சுந்தரேசுவரரும் பஞ்சமூர்த்திகளுடன் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் கோயிலின் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
வரும் நவம்பர் 24-ஆம் தேதி மாலை திருக்கார்த்திகையன்று, மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் லட்சம் தீபங்கள் ஏற்றப்படும் ஆன்மீக வைபவம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 7 மணியளவில் சுவாமியும் அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதியில் உள்ள அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகில் உள்ள பூக்கடைத் தெருவிலும் எழுந்தருள்வார்கள். இந்த இரண்டு இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு கோலாகலமாக நடைபெறும்.

திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு அன்று ஒருநாள் மட்டும் கோயிலில் உபய தங்கரதம், உபய திருக்கல் மற்றும் உபய வைரக்கீரிடம் உள்ளிட்ட எந்தவொரு விசேடக் கட்டண நிகழ்வுகளும் நடைபெறாது எனத் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
