தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக கார்த்திக் ஐ.ஏ.எஸ். நியமனம்!

 
 தலைமை செயலகம்

தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள உயர்மட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அதிரடி மாற்றத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் புதிய உள்துறை செயலாளராக ஏ. கார்த்திக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு டான்சிட்கோ தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார்.

இவர் 1996-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச்சைச் சேர்ந்தவர். அரசுப் பணியில் சேர்ந்து சுமார் 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். வரும் 2034-ம் ஆண்டு இவர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராகச் செயல்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், விலங்குகள் நலன் - பால்வளம் - மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் போன்ற முக்கிய துறைகளின் பொறுப்புகளை வகித்துள்ளார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகப் பணிகளைக் கவனிக்கும் மிக முக்கியமான உள்துறை செயலாளர் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.