கரூரில் அதிர்ச்சி! ஒரு கிராம் தங்க மூக்குத்திக்காக மூதாட்டி கொலை? மர்ம நபருக்கு போலீஸ் வலை!

 
திருச்சி

 

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற 60 வயது மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மூக்கில் அணிந்திருந்த ஒரு கிராம் தங்க மூக்குத்தி காணாமல் போயுள்ளதால், நகைக்காக கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாலாப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்சியம் (60). இவர் தினமும் லாலாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள வாழைத்தோப்புக்கு ஆடு, மாடுகளுக்கு தேவையான புல் அறுக்கச் செல்வது வழக்கம்.அதன்படி நேற்று வழக்கம்போல் புல் அறுப்பதற்காக வாழைத்தோப்புக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

ஆம்புலன்ஸ்

இரவு முழுவதும் தேடியும் இளஞ்சியம் கிடைக்காத நிலையில், இன்று காலை உறவினர்கள் மீண்டும் வாழைத்தோப்புக்கு சென்றனர். அப்போது அங்கு ரத்தக்கறைகள் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த தடயத்தை பின்தொடர்ந்து சென்றபோது, அருகில் உள்ள முட்புதரில் இளஞ்சியத்தின் சடலம் கிடந்துள்ளது.அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. மேலும், மூக்கில் அணிந்திருந்த ஒரு கிராம் தங்க மூக்குத்தி காணாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது. மர்ம நபர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு, அந்த நகையை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதுகுறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருச்சி மண்டல டிஐஜி சிபி.சக்கரவர்த்தி மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடனும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.ஒரு கிராம் தங்க மூக்குத்திக்காகவே இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.