கரூர் துயரம்... இன்று டெல்லியில் ஆஜராகும் விஜய் - சிபிஐ கேட்கப்போகும் அந்த 10 முக்கிய கேள்விகள் என்ன?

 
கரூர் கரூர்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் ஆஜராகிறார். ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், இன்று மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த விசாரணை அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ தனது கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்த விசாரணைக்காக மார்ச் 10-ம் தேதியே விஜய் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், தேர்தல் பரப்புரை மற்றும் அரசியல் பணிகளைக் காரணம் காட்டி 15 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார் விஜய். இருப்பினும், சிபிஐ அதிகாரிகள் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கி, இன்று (மார்ச் 15) கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். இதனை ஏற்று, நேற்று மாலை சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தார்.

கரூர்

இன்றைய விசாரணையில் சிபிஐ குறிவைக்கும் 5 முக்கிய அம்சங்கள்:

கூட்டத்திற்கு வருவதில் ஏற்பட்ட 7 மணி நேரத் தாமதமே மக்கள் பொறுமையிழந்து நெரிசல் ஏற்படக் காரணமாக அமைந்ததா? திட்டமிடப்பட்டதை விட மூன்று மடங்கு அதிக மக்கள் திரண்டபோது, அதைக் கட்டுப்படுத்த கட்சி சார்பில் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

காவல்துறை அனுமதி வழங்கிய விதிமுறைகள் மாநாட்டில் முறையாகப் பின்பற்றப்பட்டனவா? நெரிசல் ஏற்பட்ட செய்தி விஜய்க்கு எப்போது தெரிந்தது? தெரிந்தவுடன் மேடையிலிருந்து அவர் ஏன் உடனடியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தவில்லை?

கரூர் விஜய்

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சதி அல்லது நிர்வாகத் தவறுகள் உள்ளனவா என்பது குறித்தும் அதிகாரிகள் துருவித் துருவி விசாரிக்க உள்ளனர்.

விஜய் தங்கியுள்ள தாஜ் பேலஸ் ஹோட்டல் மற்றும் லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமையகம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கரூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் செந்தில் பாலாஜிக்கும் இதே வழக்கில் வரும் மார்ச் 17-ம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.