அதிமுக கூட்டத்திலிருந்து கே.சி.வீரமணி திடீர் வெளிநடப்பு - அடுத்த விக்கெட் காலி?!

 
கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.வீரமணி ஆவேசமாக வெளிநடப்பு செய்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஆம்பூர் தொகுதி முன்னாள் வேட்பாளருமான வெங்கடேசன், சமூக வலைதளங்களில் கே.சி.வீரமணியை 'திருடன்' என்று அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், இந்த அவதூறு பதிவிற்கு வெங்கடேசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் கூட்ட அரங்கில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

கூட்டத்தில் கே.சி.வீரமணி பேசுகையில், "தேர்தலில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்த விரக்தியில், என்னுடன் கூடவே இருந்துவிட்டு என்னை 'திருடன்' எனச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது."

"அவர் இக்கூட்டத்திற்கு வந்து மன்னிப்பு கேட்பார் என்ற நம்பிக்கையில் தான் பங்கேற்றேன். ஆனால், அவர் வரவில்லை. அவர் நேரில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை நான் இனி எந்தவொரு அதிமுக கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்" எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

உட்கட்சிப் பூசல் காரணமாக முன்னாள் அமைச்சர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறிய இந்தச் சம்பவம், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.