கீழடி 10-ம் கட்ட அகழாய்வு நிறைவு: 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய கல்விச் சமூகத்திற்கான வரலாற்றுச் சான்று கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதில் பண்டைய தமிழ் சமூகத்தின் எழுத்தறிவு மற்றும் வாழ்வியலை விளக்கும் மிக முக்கியமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழாய்வின் போது சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த சுவாரசியமான பொருட்கள் வெளிவந்துள்ளன. கீழடியில் தோண்டப்பட்ட குழியில் சுமார் 160 செ.மீ ஆழத்தில், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்ட இரு நிற சுடுமண் பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பானை ஓட்டின் மேற்பகுதியில் மீன் உருவம் மிகத் தெளிவாகக் கோட்டுச் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் தொடர்ந்து கண்டெடுக்கப்படும் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் இத்தகைய கலை வேலைப்பாடுகள் பண்டைய தமிழர்களின் எழுத்தறிவை உறுதி செய்கின்றன.
பானைகளில் பெயர்களையும் குறியீடுகளையும் பொறிக்கும் வழக்கம் அன்றாட பயன்பாட்டில் இருந்ததன் மூலம், 2,600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி மக்கள் கல்வியிலும் கலைகளிலும் மிகச் சிறந்து விளங்கிய ஒரு உயர்ந்த சமூகமாக வாழ்ந்துள்ளனர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
கீழடியில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் இந்த அரிய தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பண்டைய தமிழர்களின் பெருமையை நேரடிக் கண்டு களிக்கத் தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்து வருகின்றனர்.
