ராஜினாமா செய்தார் கீர் ஸ்டார்மர்... இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்க வாய்ப்பு!

 
ஸ்டார்மர்

இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் கீர் ஸ்டார்மர் விலகியுள்ளார். லண்டனில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்று அவர் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா முடிவை அறிவித்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கீர் ஸ்டார்மர் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் அவரது தலைமைக்குக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பின:

 நாட்டின் பொருளாதாரத் தேக்க நிலை, அதிகரித்து வந்த பணவீக்கம், சமூக நல உதவித்தொகைகள் ரத்து செய்யப்பட்டது மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மீதான நன்மதிப்பு குறையத் தொடங்கியது.

கீர் ஸ்டார்மர்

கடந்த மே மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் தொழிலாளர் கட்சி கடுமையான தோல்விகளைச் சந்தித்தது. இது ஸ்டார்மரின் தலைமைக்குக் கட்சிக்குள் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. கீ்ர் ஸ்டார்மரின் செல்வாக்கு சரிந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சியின் அடுத்த முக்கியத் தலைவராக மான்செஸ்டர் நகர மேயராக இருந்த ஆண்டி பர்ன்ஹாம் பார்க்கப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற மேக் கர்பீல்ட் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் போட்டியிட்டு, சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்வானார். இவரது இந்தத் திருப்புமுனை வெற்றி, பிரதமர் மாற்றத்திற்கான உந்துதலைக் கட்சிக்குள் தீவிரப்படுத்தியது. சொந்தக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாகக் கீர் ஸ்டார்மர் தனது பதவியை விலகும் முடிவை எடுத்தார்.

அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான கட்சித் தலைமைத் தேர்தல் ஜூலை மாதத் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அதாவது வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும் வரை கீர் ஸ்டார்மர் இடைக்காலப் பிரதமராகத் தொடருவார். தற்போது ஆளும் கட்சியின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் போட்டியாளர்களாகக் கருதப்பட்ட வெஸ் ஸ்ட்ரீட்டிங் போன்ற மூத்த அமைச்சர்கள் ஆண்டி பர்ன்ஹாமுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதால், அவர் போட்டியின்றி இங்கிலாந்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக லண்டன் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.