சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி!

 
அரவிந்த் கெஜ்ரிவால்

 

டெல்லி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது.ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 கோடி கொடுத்து, பாஜக இழுக்க முயற்சிப்பதாகவும், 21 பேர் கட்சியை விட்டு வெளியேற ஒப்புக் கொண்டதாகவும், மேலும் பலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவலை ஆம் ஆத்மியின் 2 எம்எல்ஏ-க்கள் கெஜ்ரிவாலிடம் தெரிவித்து பாஜகவின் முயற்சிக்கு தாங்கள் இணங்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.


 


இதையடுத்து சம்பந்தப்பட்ட மற்ற எம்எல்ஏ-க்களுடன் பேசிய போது, அவர்களில் 7 பேரிடம் மட்டும் பாஜக-வினர் தொடர்பு கொண்டதை உறுதி செய்தோம் என கூறிய கெஜ்ரிவால், பாஜக மற்றொரு ஆபரேஷன் தாமரையை நடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக கபளீகரம் செய்ய முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை முதல்வர் கெஜ்ரிவால் கொண்டு வந்தார். அதன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

 

டெல்லி
70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டப் பேரவையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் 62 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் 54 பேர் பேரவைக்கு வந்திருந்தனர். குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அவர்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஆம் ஆத்மி தலைமையிலான அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

From around the web