மிளகு 'கருப்பு தங்கம்' விலை கிடுகிடு உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
கேரளாவின் வேளாண் சந்தையில் 'கருப்பு தங்கம்' என்று அழைக்கப்படும் மிளகின் விலை கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது கேரள சந்தையில் ஒரு கிலோ மிளகு ரூ.750 முதல் ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது. மிளகு உற்பத்தி குறைந்ததும், சந்தையில் தேவை அதிகரித்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
குறிப்பாக, கடுமையான காலநிலை மாற்றத்தால் மிளகு சாகுபடி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து மிளகு இறக்குமதி குறைந்திருப்பதும் உள்நாட்டு சந்தையில் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிகிறது.
தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால், விரைவில் ஒரு கிலோ மிளகின் விலை ரூ.1,000-ஐ எட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிளகுக்கு கிடைத்துள்ள இந்த விலை உயர்வு விவசாயிகளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
