40 லட்சம் கொடுத்தால் அரசு பேருந்து... நஷ்டத்தை சமாளிக்க புதிய திட்டம்!
கேரளத்தில் அரசு போக்குவரத்து கழகம் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதுடன் பஸ்களை இயக்காவிட்டால் லாபம் என்ற பரிதாபமான நிலையில் உள்ளது. அமலுக்கு வந்துள்ள பெண்களுக்கான இலவச சேவை மூலம் ஆண்டுக்கு மேலும் எந்நூறு கோடி ரூபாய் கூடுதல் நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழகம் காலாவதியான பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் வாங்கக் கூட நிதியின்றி கடும் தவித்து வருகிறது.
புதிய பஸ் வாங்க கோழிக்கோடு நகர சர்வீஸ் கூட்டுறவு வங்கி அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூபாய்40லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் புதிய பஸ்கள் வாங்க தங்களது பொது நிதியில் இருந்து நன்கொடை வழங்க முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளன. இத்தகைய நன்கொடை நிதி மூலமாக எண்ணூறு கோடி ரூபாயில் இரண்டாயிரம் பஸ்கள் வாங்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய பஸ்கள் அனைத்தும் நன்கொடை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் பெயரிலேயே இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் புதிய பஸ் வாங்குவதற்காக நாற்பது லட்சம் ரூபாய் செலுத்தும் நபரின் பெயரும் அவரது புகைப்படமும் பஸ்களில் இடம்பெறும் வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
