"துணிச்சலான அரசியலாலும் வென்றவர்" - நடிகர் சலீம் குமார் மறைவுக்கு கேரள முதல்வர் அஞ்சலி!
மலையாளத் திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞன் சலீம் குமார் (56) மறைவு, கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சலீம் குமார், நேற்று காலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
He wasn’t just the prince of laughter to me — #SalimKumar was a deeply connected soul, fearless in his political beliefs and proud to say he stood with Congress. A versatile genius who could make us laugh and cry with the same face. Malayalam cinema lost a legend, and I lost a… pic.twitter.com/H0tx6RulC6
— V D Satheesan (@vdsatheesan) June 6, 2026
சலீம் குமாரின் மறைவு குறித்துக் கேரள முதல்வர் வி.டி. சதீசன் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், சலீம் குமாரின் பன்முகத்தன்மையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் தனது பதிவில், "எனக்கு அவர் வெறும் நகைச்சுவையின் இளவரசர் மட்டுமல்ல, ஆழமான பிணைப்புள்ள ஓர் ஆன்மா. தனது அரசியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதில் அவர் எப்போதும் அச்சமற்றவராகத் திகழ்ந்தார். தான் ஒரு காங்கிரஸ் ஆதரவாளர் என்று பகிரங்கமாகக் கூறுவதில் அவர் பெருமிதம் கொண்டவர்."
மேலும், "ஒரே முகத்தால் நம்மை ஒரே நேரத்தில் சிரிக்கவும் வைக்கக்கூடிய, அதே சமயம் அழவும் வைக்கக்கூடிய அபூர்வமான பன்முக மேதை அவர். மலையாளத் திரையுலகம் இன்று ஒரு உண்மையான ஜாம்பவானை இழந்துவிட்டது" என முதல்வர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற கலைஞரான சலீம் குமார், கலைத்துறையில் மட்டுமின்றி தனது வெளிப்படையான அரசியல் கருத்துக்களுக்காகவும் கேரள மக்களிடையே தனி மதிப்பைப் பெற்றவர். அவரது மறைவுச் செய்தி கேட்டது முதல், திரையுலகினர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
