கேரளாவில் 11 வயது சிறுவன் புகார்… பிரபல பெண் யூடியூபர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
கேரளாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரபல பெண் யூடியூபர் டாக்டர் நிஷா ரபேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகப் பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் மேற்கு திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து சிறுவனுக்கு திருச்சூர் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், புகாரின் அடிப்படையில் நிஷா ரபேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிஷா ரபேல் மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான முன்விரோதம் மற்றும் சொத்து விவகாரங்களால் தன் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் துறை ஆசிரியையாகப் பணியாற்றி வரும் நிஷா ரபேல், சமூக வலைதளங்களில் உத்வேகம் அளிக்கும் பேச்சுகள் மூலம் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
