கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் 61 வயது முதியவரை மீட்ட நீச்சல் வீரர் உயிரை விட்ட பரிதாபம்!

 
கேரளா

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மீட்புப் பணியின் போது, 61 வயது முதியவரைக் காப்பாற்றிய நீச்சல் பயிற்சியாளர் ஆர். ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெள்ளத்தில் சிக்கித் தவித்த பென்னி என்ற முதியவரைப் பாதுகாப்பாக மீட்ட அவர், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டை அந்த முதியவருக்கு மாட்டிவிட்டுள்ளார். இதனால் கொந்தளிப்பான ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்ட அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டதுடன் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கள்ளியூரைச் சேர்ந்த ஆர். ராஜேஷ், நீச்சல் பயிற்சியாளராகவும் மீட்புப் பணித் தொண்டராகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு மற்றும் 2024 வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களிலும் இவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரிலும் தன்னார்வலராகக் களமிறங்கிப் பலரது உயிரைக் காப்பாற்றும் உன்னத சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

மக்களின் உயிரைக் காப்பதற்காகத் தனது சொந்த உயிரைத் தியாகம் செய்த ராஜேஷின் மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் பல்வேறு தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். சக மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லையற்ற அன்பும் துணிச்சலும் என்றென்றும் மக்களின் நினைவில் நிற்கும் என்று பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். மீட்புப் பணியின் போது இவர் செய்த தியாகம் ஒட்டுமொத்த கேரள மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளதுடன் பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.