பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு!
முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் மீது கேரள வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வின் போது, பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் சரணாலயப் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகளைப் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாகப் பதிவிட்டிருந்தார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ட்ரோன் பறக்கவிட விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய குற்றத்திற்காகப் பெரியகுளம் எம்.எல்.ஏ மீது கேரள மாநில வனத்துறையினர் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ட்ரோன் பயன்படுத்திய அனுமதி குறித்து வனத்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
