முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த இரு தொகுதிகளிலும் அவரது வெற்றியில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தவெக தலைவர் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுக்களில் உள்ள சில தொழில்நுட்பக் குறைபாடுகளை முதலில் நிவர்த்தி செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் 3 வார காலத்திற்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதலமைச்சர் விஜய் மட்டுமின்றி, தற்போதைய தவெக அரசின் முக்கிய அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரது தேர்தல் வெற்றிகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதலமைச்சர் விஜய்யின் வெற்றிக்கு எதிரான வழக்குகளைப் போன்றே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இவர்களும் தங்களுக்கு எதிரான புகார்களுக்கு நீதிமன்றத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 60 நாட்களைக் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் தற்போதைய ஆளுங்கட்சி அமைச்சர் ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
