சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் கொடுமை… 78 வயது டாக்டருக்கு 47 ஆண்டுகள் சிறை!
கேரள மாநிலம் காசர்கோட்டில், சிகிச்சைக்காக கிளினிக்கிற்கு வந்த 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், 78 வயது மருத்துவருக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காசர்கோடு மாவட்டம் பெரியா பகுதியில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் பி. கிருஷ்ணன் (78). கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக சிறுமி தனது தந்தையுடன் அவரது கிளினிக்கிற்குச் சென்றுள்ளார். அப்போது பரிசோதனை அறைக்குள் சிறுமியை அழைத்துச் சென்ற மருத்துவர், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஹொஸ்துர்க் விரைவு சிறப்பு நீதிமன்றம், மருத்துவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 47 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்பதால், அவர் குறைந்தது 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.
மேலும், ரூ.1.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 18 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
