சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி வியாபாரி பலி: நீதிபதிக்கு கைது நடவடிக்கையில் இருந்து இடைக்கால பாதுகாப்பு!
கேரள மாநிலம் கொச்சி அருகே 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சொகுசு கார் மோதியதில் சாலையோர உணவக வியாபாரி உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறுவனின் தந்தையும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான அதிகாரியை கைது செய்யக்கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை செரானல்லூர் பகுதியில் இந்த விபத்து நடந்தது. தெற்கு சித்தூரைச் சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் (55), தனது உணவகத்தை மூடிவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பியபோது, பின்னால் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.
காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்றும், அவர் திருச்சூர் மாவட்டத்தில் பணியாற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதியின் மகன் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனின் தந்தையையும் போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராகச் சேர்த்தனர். அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கௌசர் எடப்பகத், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தார். மேலும், விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டார். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இந்த உத்தரவில் ஏமாற்றம் தெரிவித்துள்ளதுடன், சட்டரீதியாக தொடர்ந்து போராடப் போவதாகவும் கூறியுள்ளனர்.
