வேலைவாய்ப்பு என ஆசை காட்டி அழைப்பு... 2 நாட்கள் அடைத்து வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

 
கேரளா

 

கேரள மாநிலம் கொச்சி அருகே ஸ்பா மேலாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இளம்பெண்ணை அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து 2 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எர்ணாகுளத்தில் கணவருடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் வெளியான ஸ்பா மேலாளர் வேலைக்கான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து கடந்த 2-ம் தேதி நேர்காணலில் பங்கேற்ற அவரிடம், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

அன்றைய மாலை, குழுவில் இருந்த பெண் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, இடப்பள்ளியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு மற்ற ஊழியர்களும் இருப்பார்கள் என்றும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புடவை வழங்கப்படும் என்றும் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுக்கப்பட்டதாகவும், அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் சுயநினைவை இழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய 2 நாட்களாக அவர் விடுதியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் செல்போனில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்த பிறகு நடந்த சம்பவத்தை அறிந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க அவர் தயங்கிய நிலையில், அவரது தோழி அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கொச்சி மாநகர போலீஸ் ஆணையர் காளிராஜ் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் இளம்பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீராஜ் (30), ஜித்து மார்டின் (27) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண் உள்பட 2 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு கொச்சியில் பல ஸ்பா மையங்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதுபோன்ற மையங்களின் பின்னணியில் சட்டவிரோத செயல்பாடுகள் அல்லது வேறு கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.