மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவர்! குக்கர், பெல்ட்டால் கொடூர தாக்குதல் - கேரளாவில் அதிர்ச்சி!

 
கேரளா

 

கேரள மாநிலம் கொல்லம் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கியதுடன், ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கணவர் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொல்லம் அருகே நீண்டக்கரா பகுதியைச் சேர்ந்தவர் நந்து (27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சு (24) என்பவருக்கும் கடந்த ஜூன் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அஞ்சுவின் பெற்றோர் 25 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பின்னர் நந்துவும் அவரது பெற்றோரும் கூடுதல் வரதட்சணை கேட்டு அஞ்சுவை துன்புறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஞ்சு தனது தாயார் வீட்டுக்கு சென்ற நிலையில், கணவர் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அங்கு சென்ற சில நாட்களில் நந்து தனது மனைவியை குக்கர், பெல்ட் மற்றும் சார்ஜர் ஆகியவற்றால் தாக்கியதாக அஞ்சு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவரது கல்விச் சான்றிதழ்களை பறித்துக்கொண்டு, இனிமேல் வேலை செய்து பிழைக்கக்கூடாது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, அஞ்சுவை ஆபாசமாக படம் எடுத்த நந்து, அவர் வீட்டை விட்டு வெளியேற முயன்றால் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அஞ்சு சவுதி அரேபியாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பியுள்ளார். காயமடைந்த நிலையில் இருந்த அவரை அவரது தாயார் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சு சவரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அவரது கணவர் நந்து, மாமனார் தினேஷ் மற்றும் மாமியார் ஜெகதம்பா ஆகிய 3 பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் இருக்கும் நந்துவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.