பள்ளி மாணவி மீது அரசு பேருந்து மோதல் - காலில் சக்கரம் ஏறி படுகாயம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. பேருந்து நிலையத்தில் பேருந்து திரும்பியபோது, அந்த வழியாக பள்ளி மாணவி ஒருவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மாணவி மீது பேருந்து மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மாணவியை மீட்டு அருகில் உள்ள திருவம்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து எவ்வாறு மாணவி மீது மோதியது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
