கேரளாவிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் அறிமுகம்!

 
கேரளா கேரள அரசுப் பேருந்து கேரளா கேரள அரசுப் பேருந்து

கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவின் 13-வது முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாகப் பல்வேறு அதிரடி நலத்திட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வி.டி.சதீசன் வெளியிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து, கேரளாவிலும் மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கேரள அரசுப் போக்குவரத்துக் கழக (KSRTC) பேருந்துகளில் பெண்கள் அனைவரும் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கேரளா பேருந்து

இத்திட்டத்தை முறைப்படி செயல்படுத்துவதற்கும், இதனால் அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் கணக்கிடுவதற்கும் ஏதுவாக, பேருந்துகளில் பயணிகளின் பாலினத்தைப் பதிவு செய்யும் புதிய டிக்கெட் முறை KSRTC பேருந்துகளில் ஏற்கனவே சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் அடிமட்டப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பெண் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முக்கிய ஊதிய உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆஷா சுகாதாரப் பணியாளர்களுக்கான மாத ஊதியம் ரூபாய் 3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 1,000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள முதியவர்களின் தேவைகளைக் கவனிப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், முதியோர் நலத் திட்டங்களைச் சரியாகக் கொண்டு சேர்ப்பதற்கும் "மூத்த குடிமக்களுக்கான தனி அமைச்சகத் துறை"  ஒன்று புதிதாக உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் வி.டி.சதீசன் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

கேரளா முதலமைச்சர் வி.டி.சதீஷன்

பதவியேற்ற முதல் நா ளிலேயே பெண்களுக்கும், முதியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முற்போக்கான அறிவிப்புகளைப் புதிய அரசு வெளியிட்டுள்ளது கேரளா மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.