நவம்பர் 1 முதல் கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு!
கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம், படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான சட்டத்திருத்த மசோதா மாநில சட்டசபையில் அக்டோபர் 29-ம் தேதி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. புதிய ஊதிய உயர்வு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர சம்பளம் மற்றும் படிகள் மொத்தம் ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.98 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை கொறடா ஆகியோருக்கான மாதாந்திர தொகை ரூ.1.08 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.1.33 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது இந்த ஊதிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், அதிகபட்ச ஓய்வூதிய வரம்பு ரூ.60 ஆயிரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.6.91 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிநிலையைச் சுட்டிக்காட்டி, உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் படிகளைப் பெறப்போவதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
