மனைவி, மாமியார் வெட்டிக்கொலை... கணவர் கைது!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு அருகே உள்ள கிளன்மேரி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (36). எஸ்டேட் தொழிலாளியான இவரது மனைவி பிரியங்கா (30), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பிரியங்காவின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர், பிரியங்காவும் அவரது தாயார் நேசமும் (62) ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர். பிரியங்காவின் தந்தை இஸ்ரவேல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்து வந்த பீர்மேடு போலீசார், இஸ்ரவேலை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்ததாக பிரின்ஸ் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
