கேரளாவில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் நீர்! பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், பேரம்பரா அருகே மரக்காடி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கால்வாய் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 27-ம் தேதி இந்த மாற்றம் கண்டறியப்பட்ட நிலையில், நீரின் நிறம் மாறியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மரக்காடி கால்வாய் நீரின் நிறம் மாறியதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் நீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்கிடையே, பொதுமக்கள் அந்தக் கால்வாய் நீரைக் குடிக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மாற்று ஏற்பாடாகக் காய்ச்சி ஆறவைத்த குடிநீரை மட்டுமே பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்வாய் நீர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நீரின் நிறம் மாறியதற்கான காரணம் என்ன, அது பொதுமக்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே தெரியவரும்.எனவே, அதிகாரிகளின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அந்தக் கால்வாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
