‘கேரளா ஸ்டோரி’ பட ஸ்டைலில் கொடூரம்... IAF அதிகாரி மனைவி பாலியல் வன்கொடுமை செய்து மதமாற்றம்!
பள்ளித் தோழன் ஒருவனால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டு, விருப்பத்திற்கு மாறாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவியின் புகார், தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக இருவரைக் கைது செய்துள்ளனர். போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி இந்தச் சம்பவத்தின் பின்னணி விபரங்கள் அதிர வைத்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த அய்யாஸ் மதே என்பவர், இடம் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்தப் பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார். அப்போது அய்யாஸ், அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனைத் தனது மொபைல் போனில் ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து முதற்கட்டமாக ரூ. 4 லட்சம் பணத்தைப் பறித்துள்ளார். மற்றொரு சந்தர்ப்பத்தில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 'செய்வினை' வைத்து விடுவோம் என்று மிரட்டி, மீண்டும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்தக் கொடூரத்தின் உச்சமாக, கடந்த மே 31-ஆம் தேதி அய்யாஸ் மற்றும் அவனது கூட்டாளியான அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கல்மேஸ்வர் பகுதிக்கு வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர். அங்கு ஹஸ்ரத் மவுலானா என்ற மதகுருவின் முன்னிலையில், அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, கடுமையான மிரட்டல்களுக்கு மத்தியில் கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அய்யாஸ் மதேவுடன் அந்தப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாகத் திருமணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் மத நம்பிக்கைகளுக்கு மாறாக, அவரை கட்டாயப்படுத்தி இறைச்சி உண்ண வைத்துள்ளனர். இதன் பின்னரும், அவரை ஹோட்டல் மற்றும் அவரது சொந்த வீட்டிற்கே சென்று மிரட்டிப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் பயம் மற்றும் அவமானம் காரணமாக இந்தத் துயரங்களை வெளியில் சொல்லாமல் மௌனமாகத் தாங்கி வந்த அந்தப் பெண், ஒருகட்டத்தில் மன உளைச்சல் தாங்க முடியாமல் தனது கணவரான விமானப்படை அதிகாரியிடம் தனக்கு நேர்ந்த அனைத்துக் கொடுமைகளையும் கூறி அழுதுள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், உடனடியாகக் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

முதன்மைக் குற்றவாளியான அய்யாஸ் மதே மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டவிரோத மற்றும் கட்டாயத் திருமணத்தை நடத்தி வைத்த மதகுரு ஹஸ்ரத் மவுலானாவைத் தனிப்படை அமைத்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளிகள் மிரட்டித் துன்புறுத்தும் சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
