கேஎஃப்சி சிக்கனில் நெளிந்த புழுக்கள் - வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டது நிறுவனம்!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புகழ்பெற்ற கவுர் சிட்டி மால் பகுதியில் அமைந்துள்ள கேஎஃப்சி உணவகக் கிளையில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய ஃபிரைடு சிக்கனில் புழுக்கள் கிடந்ததாகக் கூறி வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் வைரலாகி வருகிறது.
கவுர் சிட்டி மாலில் உள்ள கேஎஃப்சி கடையில் வாடிக்கையாளர் ஒருவர் உணவுப் பொருட்களை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய ஃபிரைடு சிக்கனைச் சாப்பிடும்போது அதில் புழுக்கள் இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அந்த உணவிலும் புழுக்கள் இருப்பதை வீடியோவாகப் பதிவு செய்த அவர், அதனைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது. உலக அளவில் புகழ்பெற்ற ஒரு துரித உணவு நிறுவனத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறித்துப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி வைரலானதைத் தொடர்ந்து, கேஎஃப்சி இந்தியா நிறுவனம் உடனடியாகத் தலையிட்டுத் தனது தரப்பு விளக்கத்தைக் அளித்துள்ளது.
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட இந்தத் அசௌகரியத்திற்கும் தரக்குறைவான சேவைக்கும் கேஎஃப்சி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் வாயிலாக உடனடியாக வருத்தத்தையும் பகிரங்க மன்னிப்பையும் கோரியுள்ளது.

இந்தச் சம்பவம் எங்கு, எப்போது, எப்படி நடந்தது என்பது குறித்து விரிவான மற்றும் கடுமையான விசாரணை மேற்கொள்வதற்காகத் தொடர்புடைய வாடிக்கையாளரின் ஆர்டர் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்களை நிறுவனம் கேட்டுப் பெற்றுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் தரம் ஆகியவை தங்களுக்கு மிக முக்கியமானவை என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் விற்கப்படும் துரித உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ச்சியாக எழுந்து வரும் புகார்களின் வரிசையில் இந்தச் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
