விடைபெற்றார் காமேனி... 6 நாட்கள் மாரத்தான் இறுதிச்சடங்குகளுக்குப் பின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் காமேனி உடல் நல்லடக்கம்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல், சுமார் 4 மாத காலத் தாமதத்திற்குப் பின், 6 நாட்களாக நடைபெற்ற பிரம்மாண்ட உலகளாவிய இறுதிச்சடங்குகளின் நிறைவாக அவரது சொந்த ஊரான மஷ்ஹத் நகரில் முழு அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானைக் குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய பிரம்மாண்ட வான்வழித் தாக்குதலில், ஈரானை 34 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி வந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி ( 86) மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர்.
காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஈரான் இடையே 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த கொடூரப் போரினால் இறுதி ஊர்வலம் நடத்த முடியாத சூழல் நிலவியது. பின்னர் அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக அமைதி உடன்பாட்டின்படி, இறுதிச்சடங்கிற்காகப் போர் நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த சூலை 4-ஆம் தேதி தொடங்கிய காமேனியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச்சடங்கு நிகழ்வுகள் 6 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. காமேனி மற்றும் அவருடன் உயிரிழந்த அவரது குடும்பத்தினரின் உடல்கள் ஈரானின் தெஹ்ரான், கோம் மற்றும் ஈராக்கின் புனித நகரங்களான நஜாப், கர்பலா ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த வரலாற்று ஊர்வலத்தில், ஒட்டுமொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்ளூர் மக்கள் நேரில் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்குகளின் இறுதி நாளான நேற்று, லட்சக்கணக்கான மக்கள் புடைசூழக் காமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷ்ஹத் நகருக்குக் கொண்டு வரப்பட்டது. காமேனியின் மூத்த மகன் மொஸ்தபா காமேனி தலைமையில் இறுதிப் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டன. எனினும், ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவரது மற்றொரு மகன் மொஜ்தபா காமேனி பாதுகாப்பு காரணங்களால் பொதுவெளியில் தோன்றவில்லை.

அதன் பின்னர், ஷியா இஸ்லாமியர்களின் மிக முக்கியப் புனிதத் தலமாகத் திகழும் மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா நினைவிட வளாகத்திற்குள் அயதுல்லா அலி காமேனியின் உடல் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், இறுதி ஊர்வலப் பாதைகள் மற்றும் மஷ்ஹத் நகரின் முக்கியப் பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும், சட்டம்-ஒழுங்குச் சலசலப்புகளும் ஏற்படாமல் தடுக்கவும், லட்சக்கணக்கான மக்கள் திரண்ட கூட்ட நெரிசல்களைச் சீரமைக்கவும் ஈரான் நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் பிராந்திய போலீசார் இணைந்து துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
