குட் நியூஸ் சொன்ன பிரபல ஜோடி... கியாரா அத்வானி 2-வது முறையாக கர்ப்பம்! சித்தார்த்துடன் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதி, தங்களது 2-வது குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டனர். 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாராயா (Saraayah) என பெயரிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தங்களது குடும்பத்தில் மீண்டும் ஒரு புதிய வரவு இருப்பதை இருவரும் தற்போது அறிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள பதிவில், கியாரா, சித்தார்த் மற்றும் அவர்களது மகள் சாராயாவின் கைகள் இடம்பெற்றுள்ளன. அதில் பிறக்க உள்ள குழந்தையை குறிக்கும் வகையில் சிறிய காலணிகளும் இடம்பெற்றுள்ளன.
“மீண்டும் மிகப்பெரிய பரிசால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்களது இதயம் அன்பாலும் நன்றியுணர்வாலும் நிறைந்துள்ளது” என்ற மகிழ்ச்சியான பதிவுடன் இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களும் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கரண் ஜோஹர், கரீனா கபூர் கான், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கியாரா மற்றும் சித்தார்த் இருவரும் 2021-ம் ஆண்டு வெளியான ‘ஷெர்ஷா’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களது நட்பு காதலாக மாறியதாக கூறப்பட்டது. அதன் பின்னர் 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் தனிப்பட்டதாகவே வைத்திருக்கும் இந்த ஜோடி, முக்கியமான தருணங்களை மட்டும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறது. தற்போது 2-வது குழந்தையை எதிர்பார்ப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு, பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
