தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கு... மீண்டும் தீவிர விசாரணை நடத்த ஆணை!

 
கிட்னி கிட்னி

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டவிரோதச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கிட்னி திருட்டு விவகாரத்தில், தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தத் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தொய்வில்லாமல் மறுவிசாரணை நடத்தச் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களைத் தரகர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, போலி ஆவணங்களைத் தயாரித்துச் சட்டவிரோதமாகச் சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கொடூரம் கடந்த காலங்களில் வெளிச்சத்திற்கு வந்தது. ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை இந்தச் சிறுநீரகங்கள் விற்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த வழக்கில், சில தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ள தொடர்பு குறித்துக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கிட்னி

இருப்பினும், இடையில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எந்தவிதத் தொய்வும் இன்றி விசாரணையை முதன்முதலில் இருந்து தீவிரமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மறுவிசாரணைக் குழுவிற்குத் தலைமை தாங்கும் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா, வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

கிட்னி

ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகக் கிட்னி திருட்டில் ஈடுபட்ட தரகர்கள், போலி ஆவணத் தயாரிப்பாளர்கள் மற்றும் இதற்குத் துணை நின்ற மருத்துவமனை நிர்வாகிகள் என அனைவரும் இந்த விசாரண வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர். இந்த விவகாரத்தில் எவ்வளவு செல்வாக்கு மிக்க பின்னணி கொண்ட நபர்களாக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி பாரதிய நியாய சன்ஹிதா  சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்யச் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை தரப்பில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையின் இந்த அதிரடி மறுவிசாரணை உத்தரவு, கிட்னி திருட்டு கும்பலின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் மற்றும் பெரு முதலாளிகள் மத்தியில் தற்பொழுது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.