தேர் விபத்தில் பலி; 'வருங்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்" - அமைச்சர் அருண்ராஜ்

 
தேர்  அருண்ராஜ் தேர்  அருண்ராஜ்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் தேர்த்திருவிழா விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்குத் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மா. அருண்ராஜ் நேரில் ஆறுதல் கூறியதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நேரிடாத வண்ணம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோவில் வைகாசி விசாகத் தேரோட்டத்தின் போது, தேரின் சக்கரத்திற்கும் சுவற்றிற்கும் இடையே சிக்கி ஹர்ஷவர்தன் (18) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் தமிழக அமைச்சர் மா. அருண்ராஜ் இன்று மாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் விரைந்தார்.

டெ

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஹர்ஷவர்தனின் உடலுக்குத் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மா. அருண்ராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். விபத்தால் நிலைகுலைந்து போயிருந்த இளைஞரின் தந்தை கோவிந்தராஜா மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "இளைஞரின் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் அவசரத் தேவைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள பெரிய திருக்கோவில்களின் திருவிழாக்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அமைச்சர் சில முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

முதல்வர் விஜய்

"தமிழகத்தில் இனிவரும் காலங்களில் இது போன்ற துரதிர்ஷ்டவசமான தேர் விபத்துகள் முற்றிலும் ஏற்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் துறை சார்பில் திருவிழா மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்" என்று உறுதியளித்தார்.

தேரோட்டம் நடைபெறும் பாதைகளின் தரம், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு வழிகள் மற்றும் தேரின் சக்கரங்களுக்கு அருகே பொதுமக்கள் வராமல் தடுப்பதற்கான நவீன பாதுகாப்பு நெறிமுறைகள் இனிவரும் காலங்களில் புதிய தொழில்நுட்பங்களுடன் மறுஆய்வு செய்யப்பட்டு பலப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.