Cute Video... சிங்கம், புலிக் குட்டிகளுக்காக kinder garden தொடக்கம்!
சீன நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோங்கிங் நகரில் அமைந்துள்ள பிரபல வனவிலங்கு பூங்காவில், பிறந்த சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளுக்காக பிரத்யேகமாக மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. மனித குழந்தைகளைப் போல விலங்குக் குட்டிகளும் ஒழுக்கத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வளர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்த வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளியின் முதல் நாளில் விலங்கு பராமரிப்பாளர்கள் சிங்கக் குட்டிகளையும் புலிக் குட்டிகளையும் பிரத்யேக தள்ளுவண்டிகளில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மர நிழலில் வரிசையாக அமர வைக்கப்பட்ட குட்டிகளுக்கு மனிதக் குழந்தைகளுக்குச் செய்வது போலப் புகைப்படங்களும் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கூண்டுகளுக்குள் பிறப்பதால் குட்டிகளுக்குக் குறையும் வேட்டையாடும் குணத்தை மீட்டெடுக்கவும், அவற்றின் தப்பிப்பிழைக்கும் திறனை வளர்க்கவும் இந்த பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிங்கம் மற்றும் புலி ஆகிய இரு வேறு இனங்களைச் சேர்ந்த குட்டிகளும் சிறு வயது முதலே ஒன்றோடு ஒன்று இணைந்து பழக இப்பள்ளி உதவுகிறது.
