ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி… மாயமான 2 போலீஸ் அதிகாரிகள் சடலமாக மீட்பு; துப்பாக்கிகளும் கொள்ளை!

 
ஜம்மு காஷ்மீர்

 

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பணிக்குச் சென்றபோது மாயமான இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் (SPO) துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வைத்திருந்த அரசு ஆயுதங்களும் காணாமல் போயுள்ளதால், பயங்கரவாதத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிஷ்ட்வார் மாவட்டத்தின் டச்சன் பகுதியில் உள்ள கியார் கிராமத்தில் சிறப்பு நடவடிக்கைக் குழுவில் (SOG) பணியாற்றி வந்த பாபி சந்த் (57), ரஷ்பால் குமார் (45) ஆகிய இருவரும் புதன்கிழமை பிற்பகல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கியார் முகாமில் இருந்து தர்னா பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்குச் செல்லும் வழியில் அவர்கள் மாயமானதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை அதிகாலையில் தர்னா டாப் வனப்பகுதியில் இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் வைத்திருந்த ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் காணாமல் போயுள்ளன. இதனால் ஆயுதங்களைக் கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. வனப்பகுதியில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.