கொடைக்கானல் சுற்றுலா சென்ற இளைஞர்களிடம் துப்பாக்கி.... 3 கிமீ தூரம் வரை விரட்டி சென்று பறக்கும் படை அதிரடி!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் ஒரு வண்டி கூட விடாமல் சல்லடை போட்டுச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை யாருடைய வாகனமாக இருந்தாலும் விதிவிலக்கின்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து 4 இளைஞர்கள் வந்த ஜீப்பை அதிகாரிகள் நிறுத்தினர். அப்போது அந்த வாகனத்தில் துப்பாக்கி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், இளைஞர்கள் ஜீப்பை நிறுத்தாமல் வேகமாகத் தப்பிச் சென்றனர்.
உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த பறக்கும் படையினர், அந்த ஜீப்பை சுமார் 3 கி.மீ. தூரம் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். வாகனத்தில் இருந்த துப்பாக்கி மற்றும் ஜீப்பைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த 4 இளைஞர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்காகத் துப்பாக்கி கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
