சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை... ஏப்ரல் 23ம் தேதி கொடைக்கானல் குணா குகை, பைன் காடுகள் மூடல்!

 
கொடைக்கானல் கொடைக்கானல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கொடைக்கானலில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் அன்று ஒருநாள் மட்டும் மூடப்படும் என வனத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளதாலும், பொதுமக்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நாளன்று கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் சுற்றுலா வரத் திட்டமிட்டுள்ளவர்கள் ஏமாற்றமடையும் சூழல் உருவாகியுள்ளது.

வனத்துறையின் இந்த அறிவிப்பின்படி, கொடைக்கானலின் அடையாளங்களாக விளங்கும் தூண் பாறை, உலகப் புகழ்பெற்ற குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரிப் பகுதிக்கும் அன்றைய தினம் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்கள் அனைத்தும் 23-ம் தேதி காலை முதல் மாலை வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று மலைக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து அடுத்த நாள் முதல் வழக்கம் போல அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தேர்தலை முன்னிட்டு கொடைக்கானலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், விதிமீறல்களைத் தடுக்க வனத்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.