12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூ... நீலக் கம்பளம் விரித்த கொடைக்கானல்!
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உலகப் புகழ்பெற்ற அரிய வகை தாவரமான நீலக்குறிஞ்சி மலர்கள் ஆங்காங்கே பூக்கத் தொடங்கியுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பசுமையான புல்வெளிகளும் எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகளும் நிறைந்து காணப்படுவதுடன், பல்வேறு வனப்பகுதிகளிலும் இயற்கையான முறையில் செடிகள் வளர்ந்துள்ளன. இங்குள்ள மலைச் சரிவுகளில் இயற்கை எழிலோடு வளர்ந்துள்ள குறிஞ்சி செடிகளில் தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் கொத்து கொத்தாகப் பூத்துக் குலுங்குகின்றன.
சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த அரிய வகை மலர்கள் மலை பிரதேசங்களை நீல நிற பாயாக மாற்றி இயற்கை விரும்பிகளைக் கவர்ந்து வருகின்றன. குறிஞ்சிப் பூ பூத்திருக்கும் தகவலைக் கேள்விப்பட்டவுடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்களைக் கண்டு ரசிப்பதுடன் தங்களின் செல்லிடப்பேசிகளில் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பதிவு செய்து மகிழ்கின்றனர்.
இந்த அரிய நிகழ்வைக் காண ஏராளமானோர் வருகை தருவதால் கொடைக்கானல் பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இயற்கையின் இந்த விசித்திரமான மற்றும் அழகிய காட்சியைக் காணும் அனைவரும் மனமகிழ்ச்சி அடைவதுடன் இப்பகுதிக்குப் பயணம் செய்வதை மிகவும் விரும்பி வருகின்றனர். தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் உள்ளூர் வணிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
