வேறொருவருடன் திருமணம் நிச்சயம்! 23 வயது காதலியை 1,000 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற காதலன்

 
மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 23 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இளம்பெண்ணை சுமார் 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தள்ளியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஸ்ரீபாத் வதார் (25) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த இளம்பெண்ணுக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி வேறொருவருடன் திருமணம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நாயக்வாடி நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீபாத் வதாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த சூழலில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான முழுமையான பின்னணி மற்றும் சம்பவம் தொடர்பான பிற விவரங்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.