கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு... அரசு மருத்துவமனைகளில் 2 நிமிட மௌன அஞ்சலி!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் நினைவாக அரசு மருத்துவமனைகளில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மருத்துவர் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இரண்டு நிமிடங்கள் மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தினர். இந்தச் சோக நிகழ்வு மருத்துவ வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் மீண்டும் கடுமையான சோகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள சுகாதாரத்துறை தலைமையகமான ஸ்வாஸ்தியா பவனில் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளும் மௌன அஞ்சலி செலுத்தினர். ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட துணை ராணுவப் படையினரும், மருத்துவர்களும் மற்றும் பணியாளர்களும் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை முழுமையாக வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவருக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், இந்தச் சம்பவத்தில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் குடும்பத்தினரும் சக ஊழியர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் மேற்கு வங்க இளநிலை மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
