கூடங்குளம் அணுமின் நிலைய வாசலில் உள்ளூர் மக்கள் முற்றுகை போராட்டம்... பெரும் பரபரப்பு!

 
கூடங்குளம் கூடங்குளம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய அளவில் உள்ளூர் மக்கள் திடீரெனத் திரண்டனர். முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர். அணுமின் நிலையத்தின் முக்கிய நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து உள்ளே வேலைக்குச் செல்லும் பணியாளர்களை அனுமதிக்க மறுத்து மக்கள் ஆக்ரோஷமாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது.

கூடங்குளம் அணுஉலை

அதிகாலையிலேயே எவ்வித முன்னறிவிப்பும் மற்றும் அனுமதியும் இன்றி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் குதித்ததால் அணுமின் நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் தகுந்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அனல் பறக்கும் கோஷங்களை எழுப்பினர். அனுமதியின்றி சாலையில் அமர்ந்து மக்கள் இந்த போராட்டத்தைத் தொடர்ந்ததால் திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

கூடங்குளம்

நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரியத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என உள்ளூர் மக்கள் பிடிவாதமாக இருந்ததால் கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில்  பலத்த பதற்றம் நிலவி வருகிறது.