தூங்கிக்கொண்டிருந்த மாணவர் மீது சரிந்த அலமாரி… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள தனியார் விடுதி அறையில் மாணவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மர அலமாரி திடீரென சரிந்து கட்டில் மீது விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி அறையில் அடிக்கடி பொருட்கள் திருட்டுப் போனதால், அதைக் கண்காணிப்பதற்காக மாணவர் தனது அறையில் சிசிடிவி கேமரா பொருத்தியிருந்தார். இந்நிலையில், அவர் கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த அலமாரி திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிலிருந்த புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் கீழே சிதறின.
அலமாரியின் அடியில் மாணவர் சிக்கிக்கொண்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு எழுந்த அவர், நடந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மாணவர் உயிர் தப்பியிருந்தாலும், விடுதிகளில் அலமாரிகள் உள்ளிட்ட பொருட்களைப் பாதுகாப்பாகப் பொருத்துவதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
