வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை! நாய் குரைத்ததால் ஓட்டம்.. கோத்தகிரியில் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டுக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.கோத்தகிரி விநாயகர் கோவில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு வீட்டுக்குள் சிறுத்தை புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் அருகே இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாய், சிறுத்தையைக் கண்டதும் தொடர்ந்து குரைத்தது.

நாயின் சத்தத்தால் சிறுத்தை அங்கிருந்து உடனடியாக ஓடியது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை வீட்டுக்குள் நுழைந்த காட்சி பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள் செல்லப்பிராணிகளை வேட்டையாடும் சம்பவங்களும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தானியங்கி கூண்டு வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
