கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா... ஆக.5ல் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
சேலம் நகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக விளங்கும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்: இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த ஜூலை 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கித் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபடுவர். மேலும், பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்தல் மற்றும் உருளுதண்டம் போடுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்துவார்கள். பக்தர்கள் சிரமமின்றித் திருவிழாவில் பங்கேற்கும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்:

ஆகஸ்ட் 5-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அவசரச் சேவைகளைக் கருத்தில் கொண்டு மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் வழக்கம் போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குப் பணி நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
