செஞ்சேரிமலை குன்றுகளில் 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள், கற்கருவிகள் மீட்பு!

 
kovai kovai

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை மற்றும் அதன் அருகில் உள்ள சின்னமலை குன்றுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கால நினைவுகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை இறுதி ஆண்டு படித்து வரும் உமாமகேஸ்வரி என்ற மாணவி இந்த அரிய வரலாற்றுப் புதையலைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார். அங்குள்ள ஒரு பாறைக்குகையில் அடர் சிவப்பு நிற மண் சாயத்தால் செய்யப்பட்ட பழங்கால பாறை ஓவியங்கள் மற்றும் நுண்கற்கருவிகள் இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு கண்டறியப்பட்ட கற்கருவிகளின் தொகுப்பில் கட்டைவிரல் நகம் போன்ற வடிவத்திலான கருவிகள் மற்றும் துளையிடும் கருவிகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்தியவை என்று தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பழங்கால மனிதக் குழுக்கள் பாலக்காட்டுக் கணவாய் வழியாகக் கால்நடைகளை ஓட்டிச்செல்லும்போது இந்த குன்றுகளைத் தற்காலிகத் தங்குமிடங்களாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பாறை ஓவியங்கள்  எவ்விதப் பாதுகாப்பும் இன்றிச் சிதிலமடையும் அபாயத்தில் உள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அங்கு வரும் சமூக விரோதிகள் சிலர் பாறைகளில் கிறுக்கிச் சேதப்படுத்துவதால் இந்த அரிய சின்னங்கள் அழியும் நிலையில் உள்ளன. எனவே தொல்லியல் துறையும் சுற்றுலாத்துறையும் உடனடியாக இணைந்து இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.