வீடுகளிலும் கடைகளிலும் நீங்கா இடம்பிடித்த வெங்கடாசலபதி ஓவியம்… வரைந்த கலைஞர் சீனிவாசன் காலமானார்!

 
வெங்கடாசலபதி

 

திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதியின் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த மூத்த ஓவியர் சீனிவாசன் (86) வயது மூப்பால் காலமானார். அவரது மறைவு கலைத்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளின் அருள் கடாக்ஷம். Puratsi Saturday - Tirupathi Venkatachalam athu Perumal's Blessings

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். 10-ம் வகுப்பு வரை படித்த இவர், பிரபல ஓவியர் கொண்டையராஜுவிடம் ஓவியக் கலையைப் பயின்றார்.

கடந்த 1970-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் அழைப்பின் பேரில், கோவில் கருவறையில் உள்ள வெங்கடாசலபதி சிலையின் வடிவத்தை நேரில் பார்த்து ஓவியமாக வரைந்தார். நகைகள் அணிந்த வடிவிலும், நகைகள் இல்லாத வடிவிலும் தனித்தனியாக அவர் வரைந்த ஓவியங்களுக்கு தேவஸ்தானம் அங்கீகாரம் வழங்கியது.

பின்னர், சிவகாசி அச்சகங்கள் மூலம் அவரது ஓவியங்கள் புகைப்படங்களாகவும், காலண்டர்களாகவும் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் பலரது வீடுகள் மற்றும் கடைகளில் இடம்பெற்றன.இதன் மூலம் தனித்த அடையாளம் பெற்ற சீனிவாசன், வயது மூப்பால் நேற்று தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.