கேலி செய்ததால் ஆத்திரம்! நண்பரை கோடாரியால் வெட்டிக்கொலை !

 
சுமை

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, நண்பர்கள் கேலி செய்து பேசியதால் ஏற்பட்ட தகராறில், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஆம்புலன்ஸ்

கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர் அங்குள்ள தனியார் தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக். 27) அதிகாலையில் காளிராஜும் அவரது நண்பர்களும் திட்டங்குளம் தினசரி மார்க்கெட் வளாகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட கேலி மற்றும் நையாண்டி பேச்சு ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறியது.

இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி என்பவர், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து காளிராஜை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

சம்பவம் குறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று, காளிராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, தப்பியோடிய அயோத்தியைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். சம்பவத்தின்போது உடனிருந்தவர்கள் மற்றும் மார்க்கெட் தொழிலாளர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய கேலி, கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.