கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியுடன் விசாரணை… கோவில்பட்டி இன்ஸ்பெக்டரின் வீடியோவால் சர்ச்சை!

 
லத்தி

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள ராஜகோபால் நகரில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. தீபாவளியன்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதம் இருதரப்பு மோதலாக மாறியது. இதில் மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகிய 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவீரன், ரவி ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடி வந்தனர்.

வீடியோவால் எழுந்த சர்ச்சை

இதையடுத்து விசாரணைக்காக அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் வானமாமலை, கிராம மக்களைத் தரையில் அமர வைத்து கையில் லத்தியுடன் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் மக்களைத் தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காகவே இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதாகவும், மக்களை மிரட்டவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இதற்கிடையே, சம்பவம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை கோரியுள்ளனர்.